மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமானங்கள் இயக்குவது எப்போது?–-மத்திய மந்திரி பதில்
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமானங்கள் இயக்குவது எப்போது? என்று மத்திய மந்திரி பதில் அளித்தார்
காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகள் வருவதால் சிறிய பிரச்சினை உள்ளது. அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகிறோம். ஓடுதளத்தை எப்படி உருவாக்குவது? என்றும், அதே சமயத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி இருப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கும் முயற்சி எடுத்திருக்கிறோம்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் விரும்பினால் அனுமதிப்போம். தற்போது கூட சென்னையில் இருந்து வந்தபோது விமானத்தில் முழுமையாக பயணிகள் இல்லை. விமான நிறுவனங்களுக்கு தேவை என்றால், இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் போதிய அளவில் இருக்கின்றனர். குறைவாக இல்லை. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எந்த குறைபாடுகள் இருந்தாலும் உடனடியாக சரி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.