சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்னதான விழா


சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்னதான விழா
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதான விழா

சிங்கம்புணரியில் வேங்கைபட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு அன்னதான விழா சிங்கம்புணரி வணிக நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு உள்ள மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிக்காக கடந்த 23-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு அன்னதான விழாவிற்கு அடுப்பு மூட்டும் நிகழ்ச்சி நடந்தது.

சித்தர் முத்து வடுகநாதர் சுவாமி வாரிசுதாரர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வணிகர் நல சங்க தலைவர் வாசு, துணை தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், துணை செயலாளர் திருமாறன், விழா குழு தலைவர் பாலன், துணை தலைவர் மணிமாறன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பெரிய பாத்திரங்களில் அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டது. 4 வகை காய்கறிகளுடன் உணவு தயாரிக்கப்பட்டது.

50 ஆயிரம் பேர்

இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சித்தர் முத்துவடுகநாதருக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி காப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அன்னதான கூடத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணி அளவில் தலைவாழை இலை போட்டு பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் சுமார் 700 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தலில் அன்னதானம் நடந்தது.

காலையில் தொடங்கிய அன்னதானம் மாலை சுமார் 4 மணி வரை நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுகுமாறன், கே. ஆர். எ. கணேசன், கேஸ் கண்ணன், பாப்பா கணேசன், சந்திரன், ராஜேந்திரன், சோமசுந்தரம் வீரபாண்டியன், சுப்பிரமணியன், உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் சிங்கம்புணரி கிராமத்து முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story