மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவிலில்புரவி எடுப்பு திருவிழா


மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவிலில்புரவி எடுப்பு திருவிழா
x

கீழக்குயில்குடி மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,

அய்யனார் கருப்பணசாமி கோவில்

நாகமலைபுதுக்கோட்டையை அடுத்த கீழக்குயில்குடியில் பிரசித்தி பெற்ற மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா 4 நாட்கள் நடக்கிறது. இதற்காக ஒரு வாரம் முன்பு செவ்வாய் சாட்டுதல் நிகழ்வு நடந்தது. அன்றிலிருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி வளர்த்து வந்தனர்.

தினமும் கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாள் விழாவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி வீதி உலா நடந்தது.

2-ம் நாள் விழாவில் விளாச்சேரி கிராமத்தில் இருந்து தட்டனூர், கீழக்குயில்குடி வழியாக மலையடி ஸ்ரீஅய்யனார் கருப்பணசாமி கோவிலுக்கு புரவி(குதிரை) சிலைகள் எடுத்து வரும் வைபவம் நடந்தது. முதலில் சுவாமி சிலையுடன் கூடிய கருப்பணசாமி பட்டத்து புரவியும், அதைத் தொடர்ந்து மூன்று தேவர்களுக்கு புரவிகள், பின்னர் நேர்த்திக்கடன் புரவிகள் என 21 குதிரை புரவிகள் எடுத்து வரப்பட்டன.

சிறப்பு பூஜை

வழி நெடுகிலும் ஸ்ரீநிவாசா காலனி, தட்டனூர், கிழக்குக்குடி மற்றும் ஒத்த வீடு பகுதிகளில் பக்தர்கள் பூஜைகள் செய்து புரவி சிலைகளை வழிபட்டனர். கீழக்குயில்குடி மந்தை திடலில் பட்டத்து புரவி மற்றும் மூன்று தேவர் புரவி சிலைகளுடன் கருப்பணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிராம பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மலையடி ஸ்ரீஅய்யனார் கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு சென்று புரவி சிலைகள் நிலை நிறுத்தப்பட்டன. தொடர்ந்து கிராம பொதுமக்கள் சார்பில் ஸ்ரீ அய்யனார் கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

3-ம் நாள் விழான இன்று (வியாழக்கிழமை) ஸ்ரீ ஓடுகால அம்மன் பூஜை புறப்பாடு மற்றும் உச்சிக்கால பூஜை இரவு முழுவதும் நடக்கிறது. 4-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) பெரிய கண்மாய் நடுமடையில் மடை பூஜைகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கீழக்குயில்குடி மூன்று தேவர் வைரவினர் வகையறாவைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story