தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து; கணினி-பொருட்கள் எரிந்து நாசம்
நெல்லையில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணினி, மேஜைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
நெல்லையில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணினி, மேஜைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
தலைமை தபால் நிலையம்
நெல்லை பாளையங்கோட்டையில் தலைமை தபால் நிலையம் 3 மாடி கட்டிடத்துடன் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் நேற்று அதிகாலையில் திடீரென ஜன்னல் வழியாக கரும்புகை வந்தது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கணினிகள் நாசம்
சுமார் 45 நிமிடங்கள் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த தீவிபத்தில் கணினிகள், மேஜைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தலைமை தபால் நிலைய உதவி கண்காணிப்பாளர் பாலாஜி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் தலைமை தபால் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு தீ விபத்து
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது வீடு மாடியிலும், மருந்து கடை தரைதளத்திலும் உள்ளது. அந்த மருந்து கடையில் நேற்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கடையில் இருந்த மருந்து பொருட்கள், அட்டை பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.