தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் உள்ளாட்சி தலைவர்களுக்கு பாராட்டு கேடயம்: கலெக்டர் முரளிதரன் வழங்கினார்
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர், கலெக்டர் முரளிதரன், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி பயணம் செய்து போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்று கொண்டார். அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் மரியாதை செலுத்தினார்.
பாராட்டு கேடயம்
விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 435 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், சிறந்த ஊராட்சிக்கு விருது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாராட்டு கேடயம், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இதில், தூய்மை பாரத இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ராசிங்காபுரம் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா, பேரூராட்சி தலைவர்களான சந்திரகலா (ஆண்டிப்பட்டி), தனுஷ்கொடி (ஓடைப்பட்டி), கீதா (வீரபாண்டி), மிதுன் சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் அட்ஷயா (திம்மரசநாயக்கனூர்), அன்னலட்சுமி (தம்பிநாயக்கன்பட்டி), பொன்னழகு (தும்மக்குண்டு), பாண்டியன் (எண்டப்புளி), பிச்சை (அரண்மனைப்புதூர்), ராஜேந்திரன் (கொட்டக்குடி), அழகுமுத்து (காமாட்சிபுரம்), கருப்பையா (கோகிலாபுரம்), பொன்னுத்தாய் (நாராயணத்தேவன்பட்டி) ஆகியோர் பாராட்டு கேடயம் பெற்றனர்.
கலை நிகழ்ச்சிகள்
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த விழாவில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.