சேலம் உழவர் சந்தைகளில்ரூ.78¾ லட்சத்துக்கு விற்பனை


சேலம் உழவர் சந்தைகளில்ரூ.78¾ லட்சத்துக்கு விற்பனை
x

சேலம் ஆடி அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.78¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

சேலம்

ஆடி அமாவாசை

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைச்சல் அடைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

நேற்று ஆடி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. விவசாயிகளும் அதிகளவு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். குறிப்பாக சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவைகள் அதிக அளவில் விற்பனையானது.

ரூ.78¾ லட்சத்துக்கு விற்பனை

இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் கூடுதலாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 920 விவசாயிகள் மொத்தமாக 221 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதன் மூலம் ரூ.78 லட்ட்சத்து 99 ஆயிரத்து 409-க்கு விற்பனையானது. 52 ஆயிரத்து 690 பேர் உழவர் சந்தைகளுக்கு வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி சென்றனர் என்றனர்.

இதேபோல் சேலம் பால் மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை அமோகமாக இருந்தது.


Next Story