தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தீக்குளிக்க முயற்சி


தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மூதாட்டி ஒருவர் விஷப்பாட்டிலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி

தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மனு கொடுப்பதற்காக பசுவந்தனை கீழமங்கலத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் பாலமுருகன் (வயது 41) நேற்று வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலமுருகனை மீட்டனர். அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

இது குறித்து பாலமுருகன் கூறும்போது, 'நான் கீழமங்கலத்தில் வசித்து வருகிறேன். எலக்ட்ரீசியனாக உள்ளேன். எனது பக்கத்து வீட்டில் உள்ள சிலர் என்னை தாக்கினர். இதுதொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்' என்று தெரிவித்தார். தொடர்ந்து சிப்காட் போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

விஷ பாட்டிலுடன் மூதாட்டி

இதேபோன்று புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் சந்தணராணி (வயது 63). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு விஷபாட்டிலுடன் வந்தார். அவர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறிக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக போலீசார் அந்த மூதாட்டியிடம் இருந்த விஷப்பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

பரபரப்பு

முன்னதாக சந்தணராணி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 'நான் கூட்டாம்புளியில் வசித்து வருகிறேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்னிடம் ஆபாசமாக பேசி வருகிறார். இதனால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் புதுக்கோட்டை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார். இந்த சம்பவங்களால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story