தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவீடும் பணி


தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவீடும் பணி
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:45 PM GMT)

தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவீடு செய்யும் பணிகள் நடந்தன.

தேனி

ராஜவாய்க்கால்

தேனியில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்காக ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்தது. வீடுகள், வணிக கட்டிடங்கள் என ஆக்கிரமிப்பு பெருகியதால், வாய்க்கால் பரப்பளவு சுருங்கியதோடு, தூர்வாரப்படாமல் தூர்ந்து போனது.

இதனால் வாய்க்காலை நம்பி இருந்த விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறின. அவ்வாறு வீடுகள் கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை, பாதாள சாக்கடை வசதி போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அதேநேரத்தில் தூர்ந்துபோன ராஜவாய்க்காலில் மழைநீர் கூட வடிந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக தேனியில் பலத்த மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் குளமாக தேங்கியது.

கோர்ட்டு உத்தரவு

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று தேனியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து முதற்கட்டமாக வணிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 12-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது. சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதன்பிறகு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளும் அகற்றப்படாமல் வாய்க்காலில் கிடக்கின்றன.

அளவீடு பணிகள்

இந்நிலையில் வாய்க்கால் பகுதியில் உள்ள சில கட்டிடங்களின் உரிமையாளர்கள், பொதுப்பணித்துறையினர் வாய்க்காலை முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் மேற்கொள்வதாகவும், அளவீடு பணிகள் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பகுதிகள் எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து, ராஜவாய்க்காலில் குறிப்பிட்ட 7 மனுதாரர்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியில் முழுமையாக அளவீடு பணிகள் மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் பாஷித்கான், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரி ஆகியோர் முன்னிலையில் இந்த அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


Related Tags :
Next Story