திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் `செல்போன் தடை உத்தரவு 3 நாட்களில் அமல்படுத்தப்படும்'
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு 3 நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும், என அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு 3 நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும், என அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்தார்.
பணி நியமன ஆணை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பணியில் இருந்தபோது உயிரிழந்த பட்டாணிமுத்து என்பவருடைய மகன் இசைகார்த்தி முத்துவுக்கு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.
பின்னர் அவரிடம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அப்போது அருள்முருகன் கூறியதாவது:-
3 நாட்களில் அமல்
முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். 3 நாட்களில் நீதிமன்ற உத்தரவு முழுமையாக கோவிலில் அமல்படுத்தப்படும்.
மேலும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
லெக்கின்ஸ் அணிந்து வர தடை
அதேபோல், டீ-சர்ட், ஜீன்ஸ், ஷாட்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கோவிலில் மெகா திட்ட பணி நடந்தாலும், கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் கிடையாது. பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கம் போல் எல்லா நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
வதந்தியை நம்பாதீர்
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதேபோல் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சண்முகார்ச்சனை மீண்டும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கூறினார்.
அப்போது, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராமதாஸ், செந்தில் முருகன், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.