வேளாங்கண்ணியில், ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்


வேளாங்கண்ணியில், ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 9 Sep 2023 7:15 PM GMT (Updated: 9 Sep 2023 7:15 PM GMT)

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலகப்பிரசித்திப்பெற்ற இந்த ஆலயத்தில் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது.

திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசித்தனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார மேம்பாட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி கூறியதாவது:-

ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குப்பைகளை கையாள்வதற்கு 285 தற்காலிக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 25 டிராக்டர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும் பேரூராட்சி நிர்வாகத்தில் உள்ள 60 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றினர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மை பணியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் 250 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. கோவில் வளாகம் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குப்பைகள் தேங்காதவாறு தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பேரூராட்சி தலைவர்டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் உள்ளிட்டோரின் ஆலோசனையின்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story