அறச்சலூர் பகுதியில் மீண்டும் அட்டகாசம்: மர்ம விலங்கு ஆட்டை இழுத்து சென்றதால் பரபரப்பு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


அறச்சலூர் பகுதியில் மீண்டும் அட்டகாசம்:  மர்ம விலங்கு ஆட்டை இழுத்து சென்றதால் பரபரப்பு  கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2023 2:39 AM IST (Updated: 23 Oct 2023 2:41 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு ஆட்டை இழுத்து சென்றதால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஈரோடு

அறச்சலூர் பகுதியில் மர்ம விலங்கு மீண்டும் ஆட்டை இழுத்து சென்றதால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்றுக்குட்டியை இழுத்து சென்றது

அறச்சலூர் கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு ஒன்று புகுந்தது. பின்னர் அந்த விலங்கு, தோட்டத்தில் பட்டிக்குள் அடைக்கப்பட்டு இருந்த கன்றுக்குட்டி ஒன்றை கடித்து இழுத்து சென்றது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுகுறித்து அறச்சலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால்தடத்தை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அது சிறுத்தைப்புலியாக இருக்கும் என அச்சம் அடைந்தனர். இதனால் மர்ம விலங்கு புகுந்த அந்த தோட்டத்தில் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் அந்த மர்ம விலங்கை பிடிப்பதற்காக அங்கு ஒரு கூண்டும் வைக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் தீர்த்த குமாரசாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அட்டகாசம்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மர்மவிலங்கு மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. வெள்ளிவலசு வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அந்த பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை அடைத்து வைத்து வளர்த்து வருகிறார். இவர் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பட்டிக்கு சென்று, ஆடுகளுக்கு தீவனம் வைப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர் ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டை காணவில்லை. மேலும் பட்டியில் மர்மவிலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் இரவு பட்டிக்குள் புகுந்த மர்மவிலங்கு ஆட்டை கடித்து கொன்று இழுத்து சென்றது தெரியவந்தது.

பொதுமக்கள் பீதி

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ் அங்கு சென்று மர்மவிலங்கின் கால்தடத்தை பதிவு செய்தார். அப்போது அவர் கூறும்போது, 'மர்ம விலங்கின் கால்தடத்தை பதிவு செய்துள்ளோம். அது என்ன விலங்கு என்று விரைவில் கண்டுபிடித்து அதை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அறச்சலூர் பகுதியில் பட்டிக்குள் புகுந்து மர்மவிலங்கு மீண்டும் ஆட்டை கடித்து இழுத்து சென்ற சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு, அந்த மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story