அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்


அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
x

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் அனைத்தும் முழுமையடைந்த பின்னர் தான் செயல்படுத்தப்படும் என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் அனைத்தும் முழுமையடைந்த பின்னர் தான் செயல்படுத்தப்படும் என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அம்பேத்கர் நினைவு தினம்

அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கும், அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அ.தி.மு.க. அறிவித்ததோடு சரி அதன்பின்னர் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்களை போன்று நாங்களும் அவசரப்படக்கூடாது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அவசரப்பட்டு அந்த திட்டத்திற்குரிய அனைத்து பணிகளையும் முடிக்காமல் ஏதோ நாங்கள்தான் ஆரம்பித்தோம் என்று சொல்வதற்காக தொடங்கி வைத்து விட்டு போய்விட்டார்கள்.

ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் குழாய் மூலம் தான் எடுத்து செல்ல வேண்டும். பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மேல் ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய இடங்கள் பல தனியார் நிலங்களில் உள்ளன. அந்த இடங்களை இன்னும் அரசாங்கம் கையகப்படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அனைத்து பணிகளும் முடிந்த பின்னர்

இதுபோன்ற தொடர்பணிகள் உள்ள நிலையில் இதை அப்படியே விட்டு விட்டு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அவர்கள் செய்த அவசரத்தை போல் நாங்களும் அவசரப்பட்டால் ஏன் அவசரப்பட்டீர்கள் என்று கேள்வி வரும். எனவே அனைத்து பணிகளும் முழுமையடைந்த பின்னர் தான் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் ராமச்சந்திரன், மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story