அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர்உந்து நிலையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு


அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர்உந்து நிலையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 1.50 டி.எம்.சி. உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டது. பின்னர் இதற்கு ஆயிரத்து 756.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 நீர்உந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்-அமைச்சர் ஆய்வு

இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை அருகே உள்ள கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, இப்பணிகளை விரைந்து முடித்திட நீர்வளத்துறையைச் சேர்ந்த என்ஜினீயர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணணுண்ணி மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story