மாவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்லில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
தடகள போட்டி
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டிக்கு சங்கத்தின் தலைவரும், எம்.பி.யுமான சின்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 650-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் 100, 200, 400, 600, 800, 1,500, 2,000, 3,000, 5,000, ஓட்டப்பந்தயம், குண்டு மற்றும் ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் குதித்து தாண்டுதல், 400 மற்றும் 1,600 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பதக்கம், சான்றிதழ்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தடகள சங்கத்தின் செயலாளர் வெங்கடாஜலபதி, துணைத்தலைவர்கள் நடராஜன், அசோக்குமார், பரந்தாமன், பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்கள் நடந்த தடகள விளையாட்டு போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 150 பள்ளிகளை சேர்ந்த 1,900 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.