மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தடகள விளையாட்டு போட்டிகள்
மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அளவிலான குடியரசு தினவிழா குறுவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தா.பழூர் ஒன்றிய அளவிலான பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு வீசுதல், குண்டு எறிதல், 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி ராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.