ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி
கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
கோவையில் உள்ள நஞ்சப்பா சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து அந்த வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமி, இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றதும், பணத்தை எடுக்க முடியாததால் அவர் ஏமாந்து திரும்பி சென்றதும் தெரியவந்தது. எனவே அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.