ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி
x

பந்தலூர் அருகே கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட முயற்சித்தனர். இதில் ரூ.29 லட்சம் தப்பியது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட முயற்சித்தனர். இதில் ரூ.29 லட்சம் தப்பியது.

ஏ.டி.எம். எந்திரம்

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் தனியார் கட்டிடத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சிலர் சென்று உள்ளனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து சேரம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.

பணம் தப்பியது

இதைதொடர்ந்து வங்கி மேலாளர் அபிநந்தன் வரவழைக்கப்பட்டு, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது, கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் 2 நாட்கள் விடுமுறை என்பதால், வாடிக்கையாளர்கள் சேவைக்காக ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் வைக்கப்பட்டது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ரூ.99 ஆயிரத்து 500 ஏ.டி.எம். கார்டு மூலம் எடுத்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால், மர்ம ஆசாமிகளிடம் இருந்து ரூ.29 லட்சத்து 500 தப்பியது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை எடுத்து வங்கியில் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. மேலும் வங்கி மேலாளர் அபிநந்தன் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story