ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடைபெற்றது. அப்போது போலீசார் ரோந்து சென்றதால் பணம் தப்பியது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடைபெற்றது. அப்போது போலீசார் ரோந்து சென்றதால் பணம் தப்பியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஏ.டி.எம். மையம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

அவர்கள்,ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டு இருந்த நோட்டு புத்தகத்தில் கையெழுத்திட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையம் முழுவதும் வெப்பமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

பணத்தை திருட முயற்சி

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் வைத்து உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்றதும், போலீசார் ரோந்து சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள், திருட்டு முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே தப்பி ஓடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்குள்ள வாழைத்தோட்ட பகுதியில் கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டியூப், ராடு ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். கோவையில் இருந்து கைரேகை நிபுணர்கள் லோகேஷ், ரஞ்சித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையம், கியாஸ் சிலிண்டரில் பதிந்து இருந்த விரல் ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் தனியார் மற்றும் போலீசார் சார்பில், பொருத்தப் பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

பணம் தப்பியது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு முயற்சி நடைபெற்ற நேரத்தில் போலீசார் ரோந்து சென்றதால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story