ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திங்கள்சந்தையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது.
நாகர்கோவில்:
திங்கள்சந்தையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது.
ஏ.டி.எம். எந்திரம்
திங்கள்சந்தையில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் ரவுண்டானா அருகே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதனை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்களும், கடைகளும் உள்ளன. எனவே அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக வந்தவர்கள் ஏ.டி.எம். மையத்தின் கதவு சரியாக மூடாத நிலையில் இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
கொள்ளை முயற்சி
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கம் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு புகுந்து பணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணத்தில் எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். இதற்காக எந்திரத்தின் முன் பக்கத்தை உடைத்துவிட்டு பணம் இருக்கும் பகுதியை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் உடைக்க முடியவில்லை. எனவே முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அதில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது.
இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள்
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்கள் சேரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இதுெதாடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.