ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்


ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
x

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

ஆத்மநாதசுவாமி கோவில்

ஆவுடையார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிவில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

மாணிக்கவாசகர் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் திருவிழாவில் குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் மாணிக்கவாசகர் வலம் வந்தார்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் ஆத்மநாதா... மாணிக்க வாசகா... என்று பக்தி கோஷம் எழுப்பினர். தேர் 4 வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், ஆதினத்தின் சார்பில் தம்பிரான், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

ஆவுடையார்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பெருந்துறையான் சேவா சங்கத்தினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதேபோல் நான்கு இடங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேரோட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை உபதேசக்காட்சி

தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை வெள்ளிப்படி சட்ட வாகனத்தில் பிச்சாடனர் அலங்காரக்காட்சி, பஞ்சப்பிரகார சேவை காட்சியில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெறும். மாலை வெள்ளி ரதத்தில் ராஜ அலங்காரத்தில் மாணிக வாசகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய உபதேச காட்சி நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர்.


Next Story