மது குடிக்க பணம் தராததால்மனைவியை கொடுவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
பாலக்கோடு:
பாலக்கோடு அருேக மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொடுவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
பாலக்கோடு அருகே கொண்டசாமன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (32). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் மார்கண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வாராம்.
இது ஒருபுறம் இருக்க மார்கண்டன், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து வாக்்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குடிபோதையில் இருந்த மார்கண்டன் மீண்டும் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு விஜயா பணம் தர மறுத்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கொடுவாள் வெட்டு
இதில் ஆத்திரம் அடைந்த மார்கண்டன் வீட்டில் இருந்த கொடுவாளால் விஜயாவின் முகம், முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று விஜயாவை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மார்கண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொடுவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.