நண்பரின் காதல் திருமணத்துக்கு உதவிய தொழிலாளி மீது தாக்குதல்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் வல்லரசு (வயது 23) தொழிலாளி. வல்லரசுவும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வல்லரசு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு வல்லரசுவின் நண்பர் கார்த்திகேயன் (23) உதவியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்தனர்.
இந்தநிலையில் பாப்பாரப்பட்டி அருகே கார்த்திகேயனை சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் வல்லரசு மற்றும் உறவினர்கள் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கார்த்திகேயனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.