விவசாயி மீது தாக்குதல்
பொது பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது.
வடமதுரை அருகே உள்ள சுக்காம்பட்டி களத்துவீடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 43). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். துரைசாமிக்கும், அருகே உள்ள தோட்டத்தை சேர்ந்த சின்ராஜிக்கும் இடையே பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைசாமி தனது தோட்டத்தில் இருந்தார். அப்போது தனது உறவினர்களுடன் அங்கு வந்த சின்ராஜ் அவரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் அவர்கள், துரைசாமியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த துரைசாமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் துரைசாமி புகார் செய்தார். அதன்பேரில் சின்ராஜ் (52), அவருடைய மகன் நீலமணி (28), தம்பிகள் தாசப்பன், ராமராஜ் ஆகிய 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்தார். இதில் சின்ராஜ், நீலமணி, தாசப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராமராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.