குடும்ப தகராறில் கணவர், மாமனார் மீது தாக்குதல்
கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறில் கணவர், மாமனார் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறில் கணவர், மாமனார் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கருத்து வேறுபாடு
கோவை கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 69). விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன்(30). பவுண்டரி தொழிற்சாலை ஊழியர். இவருக்கும், மேட்டுப்பாளையம் அருகே குமாரபாளையத்தை சேர்ந்த ஜீவிதா(26) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு ஜீவிதா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.
மரக்கட்டையால் தாக்குதல்
இந்த நிலையில் ஜீவிதா சம்பவத்தன்று தனது தங்கையின் கணவரான சக்திவேல் மற்றும் உறவினர் பாலன் ஆகியோருடன் சொக்கனூரில் உள்ள கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கூச்சலிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ராஜகோபாலிடம், ஜீவிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திகேயனிடமும் தகராறு செய்ததாக தெரிகிறது.
மேலும் தனது உறவினர்களுடன் சேர்ந்து, அவர்கள் 2 பேரையும் மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த தந்தை, மகனுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஜீவிதா, சக்திவேல், பாலன் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.