கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய விவகாரம்:4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நோட்டீஸ்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் 4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வருமானவரி அதிகாரிகளை தாக்கி அரசு ஆவணங்கள், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச்சென்றதுடன், அதில் இருந்த தகவல்கள் முழுவதையும் அழித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வருமானவரித்துறையினர் கரூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மீது புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். இதில் 15 பேர் கரூர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வருமானவரித்துறை சார்பில் மதுரை வருமான வரித்துறை உதவி கமிஷனர்கள் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் சீனிவாசராவ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.பின்னர் ஐகோர்ட்டு, ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு கரூர் மாவட்ட கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறையினர் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனில் வெளியே உள்ள 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.