கீழப்பெரம்பலூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது தாக்குதல்
கீழப்பெரம்பலூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி ஜான்சிராணி, இவர் அதே ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். ஜான்சி ராணியின் அக்காள் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கஸ்தூரி, அவரது மகன் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் கீழப்பெரம்பலூர் வந்தனர். அங்கு பருத்தி வயலில் ஜான்சிராணி பஞ்சு எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, அக்காள்- தங்கை இருவருக்கும் உள்ள முன் விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாகுதலில் ஜான்சிராணி மயக்கமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அக்காள்- தங்கை இருவரும் குன்னம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இருதரப்பு புகாரையும் ஏற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.