தனியார் பஸ் அதிபர் மீது தாக்குதல்
கோவையில் தனியார் பஸ் அதிபரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி,
கோவையில் தனியார் பஸ் அதிபரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் பஸ் அதிபர்
திருப்பூர் மாவட்டம் கே.பி.என் காலனியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் சச்சின் (வயது26).இவர் திருப்பூரில் சச்சின் டிரான்ஸ்போர்ட் என்ற சுற்றுலா பஸ்களை இயக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். வாடிக்கையாளர்களுக்கு சுற்றுலாவுக்காக பஸ்களை வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் கோவை காந்திபுரத்தில் இயங்கிவரும் ட்ரிப் ஒன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் வெங்கடேஷ் என்பவர் சச்சினுக்கு போன் செய்து தனக்கு பஸ்கள்வாடகைக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து சச்சினிடம் ஆன்லைன் மூலம் முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தியுள்ளார். இதனையடுத்து சச்சின் அவரது நண்பர்கள் சிலரிடம் வெங்கடேசன் நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கையில் வெங்கடேஷ் சரியாக வாடகை தர மாட்டார் என்றும், மேலும் வாடகைக்கு எடுத்து செல்லும் வாகனங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி கொண்டு விடுவார் எனக் கூறியுள்ளனர்.
வாடகைக்கு எடுத்து சென்றனர்
இதனையடுத்து சச்சின் செல்போனில் தொடர்பு கொண்டு வாடகைக்கு பஸ்களை என்னால் தர இயலாது. எனவே உங்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.2 ஆயிரத்தை அனுப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வெங்கடேஷ் மிகுந்த கோபத்துடன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
கோவையில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களை ஊட்டிக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டுமென்று கூறி வெங்கடேஷின் நண்பர்கள் ஸ்ரீஹரி, ஹரிபிரகாஷ் ஆகியோர் பஸ்சுக்கு ரூ. 26 ஆயிரம் வாடகை பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சச்சினிடம் இருந்து பஸ்சை வாடகைக்கு எடுத்து சென்றனர். பஸ்சில் கல்லூரி மாணவர்களை ஊட்டிக்கு அழைத்து சென்று விட்டு, கடந்த 28-ந்தேதி அதிகாலை கல்லூரியின் முன்பு மாணவர்களை இறக்கி விட்டனர்.
தாக்குதல்
இந்த நிலையில் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி பிரசாத் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அப்போது வெங்கடேஷ், சச்சினிடம் நீ எங்களுக்கு வாடகைக்கு பஸ்சை தரவில்லை என்றாலும் என்னுடைய ஆட்களை வைத்து உன்னிடம் பஸ்சை வாடகைக்கு எடுத்து விட்டேன் பார்த்தாயா? இனி நீ எப்படி மீதமுள்ள தொகையை வாங்குவாய் என்று பார்க்கலாம் என்றும், மேலும் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் வெங்கடேஷ் உள்பட கும்பலை சேர்ந்தவர்கள் சச்சின் மற்றும் அந்த 2 ஓட்டுனர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் அவர்கள் காயம் அடைந்தனர்.இதனையடுத்து வெங்கடேஷ், காயம் அடைந்த சச்சின் மற்றும் 2 ஓட்டுனர்களையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வெங்கடேஷ், இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு சென்றாலோ அல்லது யாரிடமாவது கூறினால் உங்களை கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒருவர் கைது
இது குறித்து சச்சின் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் மற்றும் ஓட்டுனர்களை தாக்கிய வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இதில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சின்ன கவுண்டனூரைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ஹரிபிரசாத் (25) என்பவரை கைது செய்தனர். மற்ற கும்பலை சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர்.