தனியார் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல்: அ.ம.மு.க. பிரமுகரின் பேரன் உள்பட 2 பேர் கைது


தனியார் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல்: அ.ம.மு.க. பிரமுகரின் பேரன் உள்பட 2 பேர் கைது
x

ஏற்காட்டில் தனியார் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக அ.ம.மு.க. பிரமுகரின் பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

மாணவர்கள் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். கடந்த மாதம் அங்கு இரு தரப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் அவருடைய அண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 10 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பிளஸ்-2 மாணவர்களை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் மாணவர்களை தாக்கியது தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ஒருவரின் பேரனான மாணிக்கராஜா (வயது 20) மற்றும் அவரது நண்பர்கள் வந்து தாக்கியது தெரியவந்தது.

மேலும் 2 பேர் கைது

பள்ளியில் தகராறில் ஈடுபட்டதாக நெல்லை பாளையங்கோட்டையை சரவண அய்யப்பன், துரைராஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டார். இவர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணிக்கராஜா, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரள எல்லையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணிக்கராஜா மற்றும் அவரது உறவினர் கார்த்திக்ராஜா (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story