ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் - ஆந்திர வாகனங்களை நிறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வாலாஜாபேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை,
நேற்று ஆந்திராவுக்கு தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பும் போது சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் கேட்டதாக இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி அதற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.