போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல்
குடிபோதையில் தகராறு செய்ததை கண்டித்ததால் போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
குடிபோதையில் தகராறு செய்ததை கண்டித்ததால் போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர் மீது தாக்குதல்
பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் சசிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் இருந்தார். பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு வந்தபோது, ஆனைமலைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் கூட்டமாக இருந்தது.
மேலும் சத்தம் அதிகமாக இருந்ததால் போலீஸ்காரர் சசிகுமார் சென்று, அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது முதியவர் ஒருவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ்காரர், அவரை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் இவருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த முதியவர், போலீஸ்காரரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
அரசு பஸ் டிரைவர்
இதைத்தொடர்ந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு, அந்த முதியவரை போலீஸ் நியைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 60) என்பதும், அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் போலீஸ்காரர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.