ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரிசேலம் மத்திய சிறையை முற்றுகையிட முயற்சிமனிதநேய ஜனநாயக கட்சியினர் 250 பேர் கைது
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சேலம் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியை சேர்ந்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சேலம் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியை சேர்ந்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று சேலம் மத்திய சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் திரண்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சையது அகமது பாருக் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இணை பொதுச்செயலாளர் ரிபாயி கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், இதற்காக சட்டமன்றத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
250 பேர் கைது
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சேலம் மத்திய சிறையை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதேசமயம், நீண்டகால ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆதிநாதன் ஆணையத்தை கண்டித்தும், அந்த ஆணையத்தின் பெயரை பேப்பரில் எழுதி அதற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வேன்களில் ஏற்றி தமிழ்ச்சங்க கட்டிடத்தில் தங்க வைத்தனர். அதாவது 35 பெண்கள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு இரவு கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
விரைவில் திருச்சியில் போராட்டம்
முன்னதாக தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை எப்படி விடுதலை செய்தார்களோ? அதே நடைமுறையை பின்பற்றி 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இதற்காக 161-வது பிரிவினை பயன்படுத்தி சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே சென்னை, வேலூர், நெல்லையில் போராட்டத்தை தொடர்ந்து சேலத்தில் தற்போது போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் திருச்சி மத்திய சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.