சீர்காழியில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி


தினத்தந்தி 31 March 2023 6:47 PM GMT (Updated: 31 March 2023 6:48 PM GMT)

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது காங்கிரசார்-போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது காங்கிரசார்-போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரியகுமார் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ். ராஜேந்திரன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சித்ரா செல்வி ஆகியோர் பேசினர்.

உருவ பொம்மையை எரிக்க முயற்சி

மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிய காங்கிரசார் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக வைத்து இருந்தனர். அதைப்பார்த்த போலீசார் காங்கிரசாரிடம் இருந்து மோடி உருவ பொம்மையை கைப்பற்றினர்.

பின்னர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், பிரியக்குமார் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் மற்றொரு உருவ பொம்மையை கொண்டு வந்து தீவைத்து எரிக்க முயன்றனர், இதை பார்த்த போலீசார், அந்த உருவபொம்மையையும் பறிமுதல் செய்தனர். இதனால் போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீஸ் வேனை மறித்து போராட்டம்

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் போலீஸ் வேனை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பரபரப்பு

இந்த போராட்டத்தால் சீர்காழி பழைய பஸ் நிலைய வளாகத்தில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story