விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயற்சி - மர்ம கும்பல் தப்பி ஓட்டம்


விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயற்சி - மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
x

விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் என்ற கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு தீனதயாளன், விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். நல்லவேளையாக அவர் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அவருக்கு அருகில் சிறிது தூரம் தள்ளி விழுந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. நாட்டு வெடிகுண்டில் ஆணி மற்றும் பால்ரஸ் இருந்ததால் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். எனினும் மர்மகும்பல் விடாமல் அவரை பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார்சைக்கிளில் விரட்டிச்சென்றனர். இதற்கிடையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது தீனதயாளனை மர்மநபர்கள் ஆயுதங்களை சுழற்றியபடி விரட்டிச்செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிதுநேரத்தில் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் தனது வீட்டுக்கு வந்தார். தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டு, "வீட்டில் யாரும் இருக்க வேண்டாம். இருந்தால் உயிருக்கு ஆபத்து "என வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு சோட்டு என்ற விக்கிக்கு பிறந்தநாள் என்பதால் தீனதயாளன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது போதையில் அங்கிருந்த விக்கி மற்றும் அவரது நண்பர்களை தீனதயாளன் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் தீனதயாளனுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் என்ற கொரில்லா (19), சின்னதம்பி (21), ஈஸ்வரன் (24) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீனதயாளனை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதற்கு காரணம் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலா? அல்லது முன்விரோதமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தீனதயாளன் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story