விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி


விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

வாடகை பாக்கி

விழுப்புரம் அருகே கோலியனூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக 24 கடைகள் உள்ளன. இந்த கடைகள் கோலியனூர்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ளன.

இந்த கடைகளில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகள் 4 பேர் மட்டும் அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை செலுத்தாமல் மொத்தம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 740-ஐ பாக்கி வைத்துள்ளனர். இந்த வாடகை பணத்தை உடனடியாக செலுத்தும்படி சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. வாடகை பணத்தை செலுத்தாவிடில் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வாடகை பாக்கியை கேட்டு வந்தபோதிலும் அவர்கள் வாடகை பணத்தை செலுத்தவில்லை.

சீல் வைக்க முயற்சி

இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின்பேரில் நேற்று காலை 10 மணியளவில் உதவி ஆணையர் சிவா தலைமையில் தனி தாசில்தார் ராஜன், செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், ஆய்வாளர்கள் பாலமுருகன், லட்சுமி, சங்கீதா, உமாமகேஸ்வரி ஆகியோர் கோலியனூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க வளவனூர் போலீசாரின் உதவியுடன் சென்றனர்.

அப்போது கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சாலை மறியல்

மேலும் கடைகளை காலி செய்ய முடியாது என்றும், வாடகை பாக்கியில் குழப்பம் உள்ளதாக கூறி திடீரென காலை 10.15 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோலியனூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே, அவர்களிடம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறு தொகையை முன்பணமாக செலுத்துமாறு போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் காலை 10.30 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து 4 கடைகளின் வியாபாரிகள் சேர்ந்து மொத்தம் ரூ.71 ஆயிரத்தை, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீதமுள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் தருவதாக கூறியதன்பேரில், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story