பெண்ணை தீ வைத்து எரித்துக்கொல்ல முயற்சி
விழுப்புரம் அருகே பெண்ணை தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற அவரது கணவர்- மாமியார் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 38). இவர்கள் இருவருக்கும் கடந்த 2.7.2020 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ரஞ்சித்குமார், விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணத்தின்போது பரமேஸ்வரியின் பெற்றோர் தரப்பில் 3 பவுன் நகையை சீர்வரிசையாக வழங்கியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிள் வாங்கித்தருவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது. இதனை பரமேஸ்வரியிடம் அவரது கணவர் ரஞ்சித்குமார், மாமியார் ராணி (70), உறவினர் விஜயகுமார் மனைவி கோமதி ஆகியோர் சுட்டிக்காட்டி பேசியுள்ளனர்.
பெண்ணை எரித்துக்கொல்ல முயற்சி
இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார், தனது மனைவி பரமேஸ்வரியிடம் மது குடிக்க ரூ.500 தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. பின்னர் ராணி, தனது மகன் ரஞ்சித்குமாருக்கு பணம் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் ரஞ்சித்குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி பரமேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி கொளுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ராணி, கோமதி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த பரமேஸ்வரி, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவர்- மாமியார் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார், ராணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.