மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு செங்கம் தாலுகா கீழ்படூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி காசியம்மாள் (வயது 60) என்பவர் இன்று காலை வந்தார்.
பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காசியம்மாள் கூறியதாவது:-
கீழ்படூர் கிராமத்தில் நான் வீடு கட்டி வசித்து வருகிறேன்.
இதில் 2 சர்வே எண் வருகிறது. நான் வசிக்கும் பகுதிக்கு பட்டா வாங்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் செங்கம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தேன். கடந்த 2006-ம் ஆண்டு நான் வசிக்கும் வீட்டினை குறிப்பிட்டு எனக்கு ஒரு வீட்டுமனை பட்டா வழங்கினார்கள்.
மிரட்டல்
இந்த நிலையில் 2 சர்வே எண் உள்ள நான் வசிக்கும் பகுதியில் ஒரு சர்வே எண்ணில் உள்ள 10 சென்ட் இடம் வேறு ஒருவர் பெயரில் பட்டாவாகி உள்ளது. வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அவர்கள் மிரட்டுகிறார்கள்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு வழங்கிய எனது பட்டாவினை அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.