கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 8 Aug 2023 4:00 AM IST (Updated: 8 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்த பணத்தை வாங்கித்தரக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

கோயம்புத்தூர்

கோவை

வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்த பணத்தை வாங்கித்தரக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் நடைபாதை வசதி, முதியோர் உதவித்தொகை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

மனு கொடுக்க வந்த பொது மக்களை சோதனைக்கு பின்னரே போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். அப்போது ஒரு பெண் தனது மகளுடன் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டதும் போலீசார் விரைந்து செயல்பட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அந்த பெண், தனது மகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

வீடு கட்ட இடம்

அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கோவை ஆர்.எஸ்.புரம் ஜி.சி.டி. வளாகத்தை சேர்ந்த சரவணனின் மனைவி இந்திராணி (வயது 50) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

நாங்கள் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் வீட்டுமனை வாங்கினோம். அந்த இடத்தில் வீடு கட்டித்தருவதாக கூறிய நபருக்கும், எங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல் ஒருவரை நாடினோம். அவர் எதிர்தரப்பினருக்கு வழங்குவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பணத்தை எதிர்தரப்பினருக்கு அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தான் என்ஜினீயருக்கு படித்து உள்ளதாகவும், எனவே அந்த வீட்டை கட்டி தருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து என்னிடம் இருந்து ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.

மிரட்டல்

பணத்தை பெற்றுக்கொண்ட அவர், நாங்கள் ஏற்கனவே கட்டி வைத்திருந்த பேஸ்மட்டத்தில் இருந்து 10 அடி உயரத்திற்கு கட்டிடம் கட்டி கொடுத்தார். பின்னர் நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்று கூறிவிட்டார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார்.இதுகுறித்து வக்கீல் சங்க அலுவலகத்தில் புகார் அளித்தோம். இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட வக்கீலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை பெற்று தருவதாக கூறினார்கள். ஆனால் அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story