கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
சேலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
கருமாரியம்மன் கோவில்
சேலம் அருகே உடையாப்பட்டியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி சீனிவாசன் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பூசாரிக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவில் வெளிப்புற பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இது குறித்து சீனிவாசன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது கோவிலில் திருடுவதற்கு 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின்னர் கோவிலின் வெளிப்புறம் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு கருவறைக்குள் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும் அவர்கள் கருவறைக்குள் சென்று அங்கு உள்ள விளக்குகளையும், அணைத்து விட்டு பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்றும் தேடுகின்றனர்.
2 பூட்டுகள்
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்தனர். ஆனால் அதில் 2 பூட்டுகள் போடப்பட்டு இருந்ததால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இந்த நிலையில் அதிகாலையில் அந்த வழியாக சிலர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்ல ஆட்டோவில் வருவது வழக்கம்.
அதன்படி அதிகாலை 4 மணிக்கு ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டதும் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த காட்சிகளை கொண்டு, கோவிலில் திருட முயன்ற 2 பேர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.