சேலம் கலெக்டர் அலுவலகத்தில்மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில்மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
சேலம்

சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூதாட்டி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது, எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசை பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 75) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் திடீரென பையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த மூதாட்டி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதற்கு அவர், நிலப்பிரச்சினையில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

கொலை மிரட்டல்

இதுகுறித்து மூதாட்டி லட்சுமி கூறுகையில், எனது கணவர் சின்னதம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் எனது நிலத்தில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. நில அளவையரை அழைத்து நிலத்தை அளவீடு செய்தோம். அப்போது, நில அளவையர் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக நிலத்தை அளவீடு செய்து கொடுத்துவிட்டார்.

இதனால் அவர்கள் நிலத்தில் இருந்து காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மீண்டும் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தீர்வு கிடைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதையடுத்து மூதாட்டியை போலீசார் 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாயி

இதேபோல், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியை சேர்ந்த விவசாயி தனபால் (45) என்பவர் தனது மனைவி மேனகா மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் பையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, போலீசார் தனபாலை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில், தனபாலின் வீட்டின் அருகே தனியார் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி தயாரிப்பு நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அந்த நிறுவனம் அமைந்தால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், விவசாயமும் பாதிக்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் டவுன் போலீஸ் நிலையதத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story