கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
வழித்தட ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
வழித்தட ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
வழித்தட பிரச்சினை
தர்மபுரி மாவட்டம் ஆர்.கோபிநாதம்பட்டி அருகே போளையம்பள்ளி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 9 குடும்பத்தினருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. அதில் இவர்கள் வீடு கட்டி வசித்தனர். இவர்கள் அந்த பயன்படுத்தி வந்த வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருவதிலும், குடியிருப்பு வாசிகள் குடிநீர் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. இந்த வழித்தட பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று பிற்பகலில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அப்பகுதியை பொதுமக்கள் வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
அவர்களின் சில பெண்கள் ஒரு பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று பெண்கள் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து அதிகாரிகள் மற்றும் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.