கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
பொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி குடும்பத்தினருடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது அவருடைய மகன்கள் நடராஜன், குமார் ஆகியோர் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைபார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு ஓடிச் சென்று 2 பேரின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு
அப்போது இவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் பொது வழிப்பாதையை ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார். இதை தட்டிக் கேட்ட தங்கள் குடும்பத்தினரை சிலர் தாக்க முயன்றனர். மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது வழிப்பாதையை மீட்டு தர வலியுறுத்தி ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.