கருப்பூர் அருகே சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கருப்பூர் அருகே சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் கருப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வங்கியின் பின்புற பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றார். அப்போது வங்கியின் சுவர் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக கருப்பூர் போலீசார் மற்றும் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியமூர்த்தி, பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுவரில் துளையிட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக பின்புறம் துளையிட்டுள்ளனர். நேற்று வங்கி விடுமுறை என்பதால் யாரும் வங்கியில் இருக்க மாட்டார்கள் என்பதை பயன்படுத்தி உள்ளே புகுந்து கொள்ளைடிக்கலாம் என திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடிக்க சுவரில் துளையிட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.