மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி

செய்யாறு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு
செய்யாறு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நர்மாபள்ளம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரேவதி (வயது 37).
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ரேவதி செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்று வருவதால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட பன்னீர்செல்வம் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக அதே கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு ரேவதி அடிக்கடி சென்று விடுவதாக தெரிகிறது. அவ்வப்போது கிராமத்தில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சமாதானம் செய்து, பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வார்.
கொலை செய்ய முயற்சி
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரேவதியிடம் பன்னீர்செல்வம் பணத்தைக் கேட்டபோது அவர் கொடுக்க வில்லை. இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் வீட்டில் சாமான்களை கழுவிக் கொண்டு இருந்த ரேவதியை கத்தியால் தலையில் பின்பக்கத்தில் இருமுறை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயங்களுடன் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரேவதி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் ஆகியோர் பன்னீர்செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






