கூட்டுறவு வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி


வாய்மேடு அருகே கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7½ கோடி நகைகள், லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7½ கோடி நகைகள், லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

கூட்டுறவு வங்கி

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த வங்கியில் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நகைகளை வாடிக்கையாளர்கள் 1800 பேர் அடகு வைத்துள்ளனர். மேலும் வங்கியில் ரூ.14 லட்சம் இருப்பு உள்ளது.

ஜன்னலை உடைத்து புகுந்த கொள்ளையர்கள்

நேற்று முன்தினம் இரவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பிகளை கொள்ளையர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வங்கியின் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வங்கியின் காவலாளி முத்துக்கண்ணு அங்கு வந்து உள்ளார்.

காவலாளி மீது தாக்குதல்

இதை பார்த்த கொள்ளையர்கள், காவலாளியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தப்பியோடும்போது கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த கியாஸ் சிலிண்டரை வங்கியிலேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.

வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் வயர்களை துண்டித்து விட்டு அங்கிருந்த 'ஹார்டு டிஸ்க்கை' எடுத்து சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் 'துலீப்' கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு வங்கிக்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், வங்கியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று ஒரு கோவிலின் அருகே நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அவர்கள், வங்கியில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

வாடிக்கையாளர்கள் திரண்டனர்

கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டுறவு வங்கி முன்பு திரண்டனர். கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் அங்கு வந்து வங்கியில் கொள்ளை எதுவும் போகவில்லை எனவும், நகை, பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.

இதனால் நிம்மதியடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ரூ.7½ கோடி நகைகள் தப்பின

லாக்கரை கொள்ளையர்கள் உடைத்தபோது சத்தம் கேட்டு காவலாளி வந்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நகைகளும், ரூ.14 லட்சம் ரொக்கமும் தப்பின.கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story