ரேஷன் அரிசி கடத்த முயற்சி
சங்கராபுரத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன் பொறுப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பொது வினியோக திட்டத்திற்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக கள்ளக்குறிச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மண்டல மேலாளர் அவ்வைமணி தலைமையிலான அதிகாரிகள் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குடோன் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இளநிலை தர ஆய்வாளர் மணிபாலன், சின்னசேலம் காந்தி நகரைச்சேர்ந்த கலியபெருமாள் மகன் சபரியேஷ், லாரி டிரைவரான ராமராஜபுரத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் மணிமாறன் ஆகியோர் 50 கிலோ எடை கொண்ட 63 மூட்டை ரேஷன் அரிசியை வெளியூருக்கு கடத்துவதற்காக மினி லாரியில் ஏற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். இதில் மணிபாலன் தப்பிச்சென்றார். மற்றவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி விரைந்து வந்து குடோன் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், சபரியேஷ், மணிமாறன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற மணிபாலனை தேடி வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.