வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சி


வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மகன் ரவிக்குமார் (வயது 27), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணாவூர் மேல்பாதியை சேர்ந்த சாரங்கபாணி மகள் பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களது திருமணத்தின்போது சாரங்கபாணி, இருசக்கர வாகனம் மற்றும் தங்க நகை ஆகியவற்றை ரவிக்குமாருக்கு சீர்வரிசையாக செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீர்வரிசை பொருட்களை சாரங்கபாணி குடும்பத்தினரே வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவிக்குமார், சாரங்கபாணி வீட்டிற்கு சென்று சீர்வரிசைப்பொருட்களை எதற்காக இன்னும் கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.

மேலும் ரவிக்குமார், தனது மாமனார் வீட்டிற்கு சென்று அவர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை தோப்பில் இருந்த சுமார் 200 மரங்களை சேதப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சாரங்கபாணி, அவரது மனைவி உஷா ஆகிய இருவரும் சேர்ந்து ரவிக்குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரை சரமாரியாக தாக்கி, பேனா கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றனர். மேலும் அவரது பிறப்பு உறுப்பிலும் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரது அண்ணன் ரஞ்சித்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சாரங்கபாணி, உஷா ஆகிய இருவரின் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணியை கைது செய்தனர்.


Next Story