தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி


தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 July 2023 6:49 PM GMT (Updated: 20 July 2023 8:56 AM GMT)

நெல்லையில் தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 39). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். மேலும் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் இயங்கும் தனிப்படையிலும் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இவர் தென்காசி மாவட்ட போலீசில் டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோருடன் குலவணிகர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில நாட்களாகவே உச்சிமாகாளி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை ஏதேனும் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story