வடமாநிலத்தவரை தாக்கி பணம், செல்போன் பறிக்க முயற்சி
கரூர் அருகே வடமாநிலத்தவரை தாக்கி பணம், செல்போன் பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பதற்றமான சூழல்
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவியது. இது வடமாநில தொழிலாளர்கள் இடையே ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. ஆனால் அது வதந்தி என்றும், அதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் எங்கும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது. மேலும், வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களில் ஆய்வு செய்து அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கரூர் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விவரம் பின்வருமாறு:-
வடமாநில தொழிலாளி
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கமல்மகாராஜன் (வயது 35). இவர் கரூர் சின்னவடுகப்பட்டி அருகே அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு நடந்து செல்வதுண்டு. அதேபோல் சம்பவத்தன்று மாலையும் கமல்மகாராஜன் வேலையை முடித்து விட்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
தாக்கி பணம் பறிக்க முயற்சி
சின்னவடுகப்பட்டி பிரிவு அருகே கமல்மகாராஜன் நடந்து வந்தபோது, அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த பணம், செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டுள்ளனர்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கமல்மகராஜன் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.