பொள்ளாச்சியில் 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாலாறு படுகை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாலாறு படுகை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
புதிய திட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல புதிய திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பி.ஏ.பி. விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆழியாறு படுகை விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பொள்ளாச்சியில் நடத்தினர். தொடர்ந்து பாலாறு படுகை விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சி-பல்லடம் ரோடு ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகே நடக்கிறது. இதையொட்டி நெகமத்தில் இன்று பாலாறு படுகை பாசன சங்க தலைவர்கள், விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துண்டு பிரசுரம் வினியோகம்
திருமூர்த்தி நீர்த்தேக்கத்திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சுல்தான்பேட்டை, நெகமம், ஆனைமலை, கோட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பாசன சபை தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து 2 திட்டங்களும், பரப்பலாறு மற்றும் பாலாறு-பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து 2 திட்டங்களும் என மொத்தம் 4 திட்டங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
ஏற்றுக்கொள்ள முடியாது
பி.ஏ.பி. திட்டத்தில் ஏற்கனவே பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.