அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியது


அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியது
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

ஈரோடு

பெருந்துறை

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

6 மாதமாக நின்றது

அத்திக்கடவு- அவினாசி நீரேற்று திட்டத்தில் பிரதான ராட்சத குழாய்களை பதிக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதில் எஞ்சிய நசியனூர் அருகே உள்ள புதுப்பாளையம் மற்றும் கந்தாம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியே உள்ள விவசாய பூமிக்குள் 800 மீட்டர் தூரத்திற்கும், நெடுஞ்சாலையில் 150 மீட்டர் தூரத்திற்கும் குழாய்கள் பதிக்கும் 5 சதவீத பணிகள் மட்டும் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே விவசாய பூமிக்குள் ராட்சத குழாய்களை பதிக்க சம்பந்தப்பட்ட விவசாயிகள் கேட்ட இழப்பீட்டுத் தொகையைத் தர பொதுப்பணி துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அத்திக்கடவு - அவினாசி திட்டம் முழுமையாக நிறைவடையாமல் கடந்த 6 மாதமாக நின்று விட்டது.

உரிய இழப்பீடு

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதியன்று நசியனூர் புதுப்பாளையத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து நிலத்திற்கு சொந்தக்காரர்களான விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகளின் பிரதிநிதிகள், பெருந்துறை ஒன்றிய தி.மு.க.செயலாளர் கே.பி.சாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

பேச்சு வார்த்தையின் முடிவில் குடிநீர் திட்டப்பணிக்காக நிலத்தை அளிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அளவீடு செய்யும் பணி

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக புதுப்பாளையம் மற்றும் கந்தாம்பாளையம் வழியாக செல்லும் பிரதான குழாய் பதிக்கும் இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

இதில் அரசு நில அளவையாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் திட்டப்பணி ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி கட்டுமான நிறுவன பொறியாளர்கள் கலந்துகொண்டு குழாய் செல்லும் இடங்களை உறுதி செய்தனர்.

மீண்டும் தொடங்கியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் நின்றுபோன பணி மீண்டும் தொடங்கப்படுவதற்கான நிகழ்ச்சி புதுப்பாளையத்தில் நடைபெற்றது. பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி முன்னிலையில் திட்டப்பணிக்கு நிலம் வழங்கிய விவசாயி பெரியவேலப்பன் பூமி பூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தார்.

பெருந்துறை ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பி.சின்னச்சாமி (வடக்கு), சி.பெரியசாமி (கிழக்கு), முள்ளம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மோகன், தி.மு.க.கிளை செயலாளர் மலைப்பாளையம் பாலு, துடுப்பதி ஊராட்சி முன்னாள் தலைவர் டி.கே.பெரியசாமி, சமூக ஆர்வலர் பெருந்துறை முருகபூபதி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.


Next Story